மாதா கோயில் அருகே... போக்சோ வழக்கு பின்னணியில் 20 வயது இளைஞர் கொலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருந்தை கிராமத்தில் மாதா கோவில் அருகே 20 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 28-ம் தேதி அதிகாலை வழக்கம்போல் வழிபாட்டிற்கு சென்ற கிராம மக்கள், தேவாலயத்துக்கும் அரசு RC பள்ளிக்கும் இடையில் ஒருவர் அசையாமல் கிடந்ததை கண்டு, முதலில் அவர் போதையில் உறங்குவதாக நினைத்தனர். ஆனால் பிரார்த்தனை முடிந்து திரும்பியபோது கூட அந்த நபர் அசையாததை பார்த்த மக்கள் அருகில் சென்று பார்த்ததில், முகம், புருவம், தலையில் கடுமையான அடிகாயங்களுடன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் பெறப்பட்ட திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனி ஆரோக்கிய ஜோ (20) என அடையாளம் காணப்பட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரோக்கிய ஜோவின் தாய் கிரேசி மேரி புகார் அளித்ததையடுத்து, திருநாவலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஆரோக்கிய ஜோ மற்றும் தேவா என்ற இளைஞருக்கு எதிராக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிய வந்தது. தேவாவின் தம்பி லிஷ்சன் (20) இதனால் கடுப்படைந்து, தனது அண்ணனை போக்சோ வழக்கில் சிக்க வைத்ததாக ஆரோக்கிய ஜோ மீது பழி வைத்திருந்தார்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி இரவு லிஷ்சன், ஆரோக்கிய ஜோவை மாதா கோவில் அருகே வரவழைத்து, அதிகமாக மது குடிக்க வைத்து, பின்னர் இரும்பு ராடால் தலையில் மற்றும் முகத்தில் தாக்கி கொலை செய்துள்ளார். உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் லிஷ்சன் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த 16 வயது சிறுவனும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தத்தம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம், பழிவாங்கும் மனநிலையால் உயிரிழந்த இளைஞரின் மரணத்தால் கிராமத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
