பக்தர்கள் மகிழ்ச்சி... இனி திருப்பதி லட்டு பிரசாதம் பல ஊர்களிலும் கிடைக்க ஏற்பாடு!
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் திருப்பதி போயிட்டு வந்தா, எங்கே லட்டு பிரசாதம்? என்று கேட்கிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அந்தளவுக்கு உலக பிரசித்தி பெற்றதாக திருப்பதி லட்டு விளங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் மட்டுமல்லாமல் பல ஊர்களிலும் திருப்பதி லட்டு பிரசாதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த கர்நாடக மாநிலம் கூட்டுறவு சங்கம் தயாரிக்கும் நந்தினி நெய்யை உபயோகிப்பது என திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது.
ஏற்கெனவே பலரிடமிருந்து பெறப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பது தெரிய வந்ததால், உடனடியாக அவற்றின் டெண்டர்களை நிறுத்தி, மறு டெண்டர் கோரியது. இதில் கர்நாடக மாநில கூட்டுறவு சங்கம் பங்கேற்று தரமான நெய்யை வழங்குவோம் என உத்தரவாதம் அளித்தது. இதனை தொடர்ந்து அந்த நெய் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று டேங்கர் லாரி மூலம் நந்தினி நெய் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறைக்கு வரவழைக்கப்பட்டது. அங்கு நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அப்போது அக்குழு நெய்யின் தரத்தை உயர்த்த வேண்டும் என அறிக்கை கொடுத்தது.
அதன்பேரில், டெண்டர் கோரப்பட்டது. இதில் கர்நாடக மாநில கூட்டுறவு சங்கத்தின் நந்தினி நெய்யை உபயோகிப்பது என முடிவு செய்யப்பட்டது.பக்தர்களும் லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், அது பரவலாக கிடைக்க வழி வகுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதலால், சென்னை, வேலூர், பெங்களூரு தகவல் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்த லட்டு பிரசாதம் இனி ஆந்திர மாநிலம், ரம்ப சோடவரம், ஒண்டிமிட்டா, பித்தாபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கன மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் 75 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் திருப்பதியில் உள்ள கபிலதீர்த்தம் சிவன் கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரம், அப்பலைய்ய குண்டா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது” என்று கூறினார்.