மதுரை ஜல்லிக்கட்டு போட்டி... இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்.. விதிமுறைகள் வெளியீடு!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 16ம் தேதி, அவனியாபுரத்தில் ஜனவரி 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று ஜனவரி 6ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. எனவே காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை இன்று மாலை 5 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!