அட... திருச்செந்தூரில் பழனி முருகன்... பக்தர்கள் ஆச்சர்யம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ம் படை வீடாக திகழ்கிறது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டதாலும், கடல் உள்வாங்குவதாலும் கடலுக்குள் இருக்கும் கல் சிலைகள் வெளியே தெரிகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் அய்யா கோவில் பின்புறம் கடற்கரை ஓரமாக பாதயாத்திரை ஆக வரக்கூடிய பக்தர்கள் அவர்கள் மினி ஆட்டோ லோடு ஆட்டோ போன்ற வாகனத்தில் முருகன், பழனி ஆண்டவர், வெண்கல சிலை, மரத்தினால் செய்யப்பட்ட சிலை இவைகளை தங்களுடைய வாகனங்களில் வைத்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவது வழக்கம். அவர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்த பிறகு எடுத்து வந்த மரங்களால் செய்யப்பட்ட சிலை சேதமடைந்து விட்டால் அந்த சிலைகளை கடற்கரையில் விட்டு விட்டு சென்று விடுவார்கள்.
அப்படி விட்டு விட்டு சென்ற சிலை தான் மரத்தினால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சிலை. இந்த சிலையின் கை பகுதி சேதம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாகவே அந்த சிலையானது அதே கடல் பகுதியில் இருப்பதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் அந்த சிலையின் அருகில் போய் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். திருச்செந்தூர் கடற்கரை சுற்றிலும் அதிகமான கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால், செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக காணப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சார்பாக இந்த கடவுள்கள் சிலைகளை எல்லாம் தனியாக ஒரு இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும் என பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.