திருச்செந்தூரில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் அமானுஷ்ய சிற்பங்கள்!

 
திருச்செந்தூர்


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில்  பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.  கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பதால்  பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடும் படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர்
இந்த கடல் அரிப்பு காரணமாகவும், கடல் சீற்றத்தின் காரணமாகவும் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து ஏராளமான பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் வெளியே வருவது அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  தற்போது ஒரு கல்சிற்பம் சேதமடைந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் காணப்படுகிறது. மூன்று அடி உயரம் கொண்ட அந்த சிலையில் தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லை. கழுத்தில் பெரிய மாலை அணிந்தபடி நாட்டியமாடுவதற்காக இரண்டு கால்களையும் விரித்து வைத்து  இடுப்பில் வேஷ்டி கட்டியபடி இந்த சிலை உள்ளது. 
அதன் அருகிலேயே  மற்றொரு சிலையும் கிடைத்துள்ளது.  அந்த சிலையும் தலை மற்றும் வலது கை சேதமடைந்த நிலையில்  தட்சிணாமூர்த்தி சிலைபோல் காணப்படுகிறது. இந்த இரு சிலைகளின்  அருகே ஒரு நாகர் சிலையும் காணப்படுகிறது. தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதன் காரணமாக கடல் அலையில் சிக்கி வெளிவரும் சிற்பங்களை கடலில் நீராடும் பக்தர்கள் கரையோரம் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதன் பிறகு கிடைத்த  ஒரு நாகர் சிலை கடலுக்கும் கரைக்கும் இடையே நிறுத்தப்பட்டுள்ளது.  தொடர்ந்து திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து சிலைகள் கிடைத்து வருவது பக்தர்களிடையே  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன்


இந்த கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர்.  ஜனவரி 4ம் தேதி மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் சுமார் 4000 அடி உயரம் கொண்ட ஒரு கல் கரை ஒதுங்கியது.  அதில் எழுத்துகள் இருந்ததால் கோயில் பணியாளர்கள் அந்த கல்லின் மீது விபூதியை தேய்த்து படித்தனர். அதில் இருந்த எழுத்துகள் தற்போதைய கால எழுத்துக்களாக இருந்தன. மேலும் அந்த கல்வெட்டில் முனி தீர்த்தம் என தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்தது.  அதற்கு கீழ் "இதன் பலன் ஆன்மாக்களை கட்டியிருக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரும்புச் சங்கிலியை தேய்ப்பதற்கு அரத்தை போலிருந்து பலனைக் கொடுக்கும்," என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.  2024 டிசம்பரில்  இரு கல்வெட்டுகள் கரை ஒதுங்கிய நிலையில் அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என இருந்தது. மேலும் இந்த தீர்த்தத்தில் குளித்தால் சொர்க்கம் கிடைக்கும் எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும் அவை பராமரிக்கப்படாமல் விடப்பட்டதாகவும் அந்த தீர்த்தங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கி வருவதாக பக்தர்கள் சிலர் கூறுகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web