இன்று இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு... தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்!
மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய கடல்சார் வார மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
‘இந்திய கடல்சார் வாரம்’ எனப்படும் இம்மாநாடு கடந்த 27-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. மொத்தம் 85-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 1 லட்சம் பிரதிநிதிகளும், 350-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்களும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் மும்பை பம்பாய் கண்காட்சி மையத்தில் நடைபெறும் ‘கடல்சார் தலைவர்கள் மாநாட்டில்’ பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகளின் கூட்டமைப்பை அவர் தலைமையேற்கிறார்.
இம்மாநாட்டில் சர்வதேச கடல்சார் அமைப்புகள், பெரும் முதலீட்டாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கடல்சார் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து விவாதிக்கின்றனர். நிலையான கடல்சார் வளர்ச்சி, பசுமை கப்பல் போக்குவரத்து, திறமையான வினியோகம் போன்றவை இதில் முக்கிய அம்சங்களாக பேசப்படுகின்றன.

தமிழ்நாடு அரசும் இந்த மாநாட்டில் சிறப்பாக பங்கேற்கிறது. தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழுவாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் கடல்வழி மரபுகளை வெளிப்படுத்துகின்றனர். முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் தனிப்பட்ட காட்சிகள் மற்றும் வணிக அமர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழகத்தின் பொதுப்பணிகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் மும்பை மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் பங்கேற்கும் அமர்வுகளில், உலகளாவிய கடல்சார் வளர்ச்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
