போலீசிடம் தப்பித்து தியேட்டரில் 'கருப்பு' படம் பார்த்துக் கொண்டிருந்த கைதி!

 
கைதி கைதி

திருச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது உசேன் என்ற கைதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குப் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி தப்பியோடிய அவர், 13 நாட்களாகப் போலீசாருக்குத் தண்ணீர்காட்டி வந்த நிலையில், விருதுநகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து தப்பிய முகமது உசேனைப் பிடிக்கச் சேலம் மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பல்வேறு மாவட்டங்களுக்குப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்கத் தனது தலைமுடியை வெட்டி, தாடியை மழித்துத் தனது அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு முகமது உசேன் பல்வேறு ஊர்களில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் விருதுநகர் பகுதியில் உள்ள ஒரு பிரபலத் திரையரங்கில் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சாதாரண உடையில் தியேட்டருக்குள் நுழைந்த தனிப்படை போலீசார், படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் ரகசியமாகக் கண்காணித்தனர்.

திரைப்படத்தின் இடைவேளையின் போது, விளக்குகள் எரியவிடப்பட்ட தருணத்தில், முகமது உசேனைத் துல்லியமாக அடையாளம் கண்ட போலீசார் அவரைச் சுற்றிலும் வளைத்துக் கையும் களவுமாக கைது செய்தனர். 13 நாட்களாகப் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜாலியாகத் தியேட்டரில் படம் பார்க்க வந்த கைதி, இடைவேளையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான முகமது உசேன் உடனடியாக பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சேலம் மத்திய சிறைக்குக்  கொண்டு செல்லப்பட்டுத் தனி அறையில் அடைக்கப்பட்டார்.