புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்... முழு தகவல்கள்!

 
வருடம் முழுவதும் செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்! இப்படி செய்து பாருங்க!
இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வந்தால் வாழ்வில் அத்தனை சுகங்களும் கிடைக்கும். கண்கண்ட தெய்வம் திருப்பதி பெருமாளை நினைத்து கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்த நாமாவளி சொல்லும் போதே நம் நெஞ்சில் நிறைந்து விடுகிறார் ஏழுமலையான். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கு என தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரதமிருக்க முடியாதவர்கள், புரட்டாசிச் சனி கிழமைகளில் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர்.

பீமனுக்கு வைகுண்டம் கொடுத்த புரட்டாசி சனிக்கிழமை  விரதம்!

வெங்கடாசலபதிக்கு நிவேதனமாக  சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான ‘நவநீதமும்’ படைப்பதுண்டு. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ, பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்வது  நம் மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கோஷமிட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளுக்கு பிரியமான விழாவானதால், அன்று வீட்டிலுள்ள குட்டிப் பிள்ளைகளுக்கு நெற்றியில் நாமம் இட்டு, அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிக்ஷை எடுத்து வரச் செய்வார்கள்.  

அன்று முக்கியமாக பச்சரிசி மாவில், விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.  பூஜை முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

புரட்டாசி சனிக்கிழமை  விரதத்தின் மகிமையை விளக்கும் புராணக்கதை  

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ள திருமலையில், பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும்  சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித் தவறி போனால், '' பெருமாளே, நீயே  எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு  போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.

படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக்  கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.அதே காலகட்டத்தில் அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கத்தினால் ஆன பூமாலை ஒன்றை அணிவிப்பார்.

திருப்பதி திருமலை பெருமாள்
ஒரு முறை இப்படி அணிந்து விட்டு, மறு வாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூமாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு  செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர், இறுதி காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழு மலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதனால், சனி பகவானால்  ஏற்படும் கெடுபலன்கள் குறைய,காக்கும் கடவுளான  திருமாலை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது வழக்கத்தில் வந்தது.

சனிஸ்வரனுக்கு பிரியமான தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினைஅவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களாகும்.

உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப் பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. ஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனிஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும்.

கறுப்புத் துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்குப் பிரீதி செய்யலாம்.

பீமனுக்கு வைகுண்டம் அருளிய எம்பெருமான் வெங்கடாசலபதி  பெருமாளை புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் வணங்கி ஏழுமலையான் அருள் பெறுவோம்.

ஓம் நமோ வெங்கடேசாய!

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web