நர்சிங் மாணவியின் பலாத்கார வழக்கு... மன அழுத்தத்தால் பொய் கூறியது அம்பலம்!
தமிழகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்ததாக அளித்த பாலியல் புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், தீவிர விசாரணையில் இதை மாணவி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக அவர் இது போல் கூறியுள்ளதாகவும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அ.பிரதீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேனி நர்சிங் மாணவி ஒருவர், தான் ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மாணவி புகாரில் உண்மைத்தன்மை இல்லை என தெரிய வந்தது. இருந்த போதிலும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப், ''தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியதாகவும் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்தி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் அளித்த புகார் தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவரை சோதனை செய்ததில், அவர் கூறியது போல் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதை அந்த மாணவியே ஒப்புக் கொண்டு விட்டார்.
மாணவி குடும்பப் பிரச்சினை காரணமாக உள்ள மனஅழுத்தத்தால் இதுபோன்று தவறான தகவலை
தெரிவித்துள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவிக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.