'ரசகுல்லா' தீர்ந்து போனதால் உறவினர்களுக்குள் அடிதடி... பாதியிலேயே நின்ற திருமணம்!
பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், சாப்பாட்டுப் பகுதியில் ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட வாக்குவாதம், மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பெரும் அடிதடியாக மாறி, திருமணமே பாதியிலேயே நின்றுபோன அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த நவம்பர் 29ம் தேதி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திருமண வரவேற்புக்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்று ரசகுல்லா கேட்டுள்ளனர். ஆனால் அங்கு ரசகுல்லா தீர்ந்து போனதாகக் கூறப்பட்டதால், கோபமடைந்தவர்கள் கத்தத் தொடங்கினர். சிலர் ஆத்திரத்தில் நாற்காலிகளைத் தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திலேயே மணமகன் வீட்டாருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியாக மாறி, திருமண மண்டபமே பெரும் கலவரக் களமாக மாறியது.

இந்த மோதல் காரணமாகத் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மனமுடைந்த மணப்பெண் வீட்டார் அங்கிருந்து அதிரடியாகக் கிளம்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்தவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்தச் சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணப்பெண் வீட்டார், இனி இந்தத் திருமணத்தில் தங்களுக்குச் சம்மதம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மணமகன் வீட்டார் மற்றும் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்யப் பலமுறை முயன்றும், மணப்பெண் வீட்டார் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஒரு இனிப்புப் பலகாரத்தால் ஒரு திருமணமே நின்றுபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
