துயரத்திலும் நெகிழ்ச்சி... முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட முத்துக்காளை!

 
முத்துக்காளை முத்துக்காளை

தமிழ் சினிமா உலகில் வடிவேலு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் முத்துக்காளை. இவருடைய மனைவி சமீபத்தில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் இந்த தீரா இழப்பால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள நடிகர் முத்துக்காளை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

"என்னுடைய அன்பான மனைவி என்னை விட்டுப் பிரிந்து மறைந்த விஷயம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தத் துயரமான சூழ்நிலையிலும் நான்  இந்த வீடியோவை வெளியிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எனது மனைவியின் தீவிரமான உடல்நலக்குறைவின் போது, அவசர உதவி கோரி நான் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தேன். அதனைப் பார்த்த அடுத்த கணமே, தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டுப் போர்க்கால அடிப்படையில் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய உத்தரவிட்டார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

முத்துக்காளை

மேலும், தனது நன்றியுரையைத் தொடர்ந்த அவர், "முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மருத்துவமனையில் எனது மனைவிக்கு மிகத் தீவிரமான உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக அவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது வேதனையானது. இருப்பினும், நான் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று தெரிந்த உடனே தவெக மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதேபோல், படத்தின் இயக்குநரும் நடிகருமான ராஜ்மோகன் அவர்கள் எனது இல்லத்திற்கு நேரில் வந்து எனக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்" என்று முத்துக்காளை மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

முத்துக்காளையின் இந்த உருக்கமான வீடியோவைப் பார்த்த திரை உலகினரும், ரசிகர்களும் அவரது மனைவியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இந்த இக்கட்டான சூழலில் அவர் மனவலிமையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.