சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் ... விண்ணப்பிக்கும் முறை, பெறுவதற்கான தகுதி... முழு தகவல்கள்!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவது எப்படி? என்பது குறித்து இந்த துறையை சேர்ந்த அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்கள், ஆண்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் கொண்ட சுய உதவிக்குழு ரூ.15 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் கடன் வழங்கப்படும். இதற்கு ஆண்டு வட்டி 6 சதவீதம் ஆகும். கடனை திரும்ப செலுத்துவதற்கு 2½ ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் வகுப்பினர் மட்டுமே பயன் பெற முடியும்.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 18 முதல் 60 வரை வயது வரம்பு ஆகும். கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்சு) அவசியம். அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள், இந்த துறையின் www.tabcedco.tn.gov.in இணையதளம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட, மத்திய, நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் / நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை துணை முகவர்களாக அங்கீகரிக்கப்பட்டவை . கடன் உதவி பெறப்படும் விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும். பின்னர் பயனாளியின் செயல்பாடு, தகுதி, கடனை திருப்பி செலுத்தும் திறனை ஆய்வு செய்வதற்கு மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில் இயங்கும் கூர்ந்தாய்வுக் குழுவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த குழுவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பு அலுவலர், தமிழ்நாடு, மகளிர் மேம்பாட்டு கழகத்தின் திட்ட அலுவலர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் பிரதிநிதி, சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதி ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் 2 மாதங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குரிய தவணையுரிமை காலமாக அனுமதிக்கப்படும். கடன் தொகையை தவணை தேதியில் திரும்பச் செலுத்தவில்லையென்றால் ஆண்டுக்கு 5 சதவீத அபராத வட்டி வசூலிக்கப்படும். கடன் வழங்கப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் சம்பந்தப்பட்ட வங்கியில் ஒரு கடன் தொகை அட்டை வழங்கப்படும். கடன் பெற்றவர் இந்த அட்டையை ஒவ்வொரு தவணை திரும்பச் செலுத்தும்போதும், வங்கிகளுக்கு எடுத்து சென்று காண்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!