சோகம்... சமாதானம் பேச வீடு தேடிச் சென்ற இளைஞர் படுகொலை!

முன்விரோதத்தை தவிர்ப்பதற்காக சமாதானம் பேச சென்ற இளைஞர், ஆத்திரத்தில் குத்திக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் ராஜா (29). திருப்பரங்குன்றம் மேலபச்சேரி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜேந்திர பிரசாத் (22). அவரது நண்பர் சண்முகராஜ் (24). ராஜேந்திர பிரசாத், கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் இருவருக்குள்ளும் கடந்த தீபாவளியன்று தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதமும் வளர்ந்து வந்துள்ளது. அடிக்கடி கார்த்திக் ராஜா, ராஜேந்திர பிரசாத் மீது இருசக்கர வாகனம் மூலம் மோதி தொல்லைகள் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் ராஜா வீட்டிற்கு சமாதானம் பேசுவதற்காக ராஜேந்திர பிரசாத், அவரது நண்பர் சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்று அவரிடம் பேச முற்பட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ராஜேந்திர பிரசாத் கார்த்தி ராஜாவை தராசின் இரும்பு படிக்கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து ராஜேந்திரபிரசாத் தோள்பட்டையில் குத்தினார்.
இதனால் படுகாயமடைந்த ராஜேந்திரபிரசாத், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இருந்த போதிலும் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து திருப்பரங்குன்றம் போலீசார் ராஜேந்திரபிரசாத் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கார்த்திக்ராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா