பிரபாகரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

 
இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!
 


 
தமிழ் தேசிய புலிகள் தலைவர் பிரபாகரனின் 70வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  “பெருமைகள் பல நிறைந்த தமிழ்த்தேசிய இனத்தின் முகமாக முகவரியாக அறிவாக ஆற்றலாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரவி வாழும் எனது தமிழினச் சொந்தங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தன்னம்பிக்கை கொண்ட தீரர்கள் ஒரு சிலரது தனி வரலாறே உலக வரலாறாக மாறி இருக்கிறது என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர். இந்த உலகத்தில் ஏற்பட்டுள்ள எல்லா மாற்றங்களுக்கும் மூலக் காரணமாக விளங்குபவர்கள் செயல் திறனும் சிந்தனையாற்றலும் கொண்ட தனி மனிதர்களே என்கிறார் புரட்சியாளர் லெனின். இந்தப் பூமிப்பந்து தோன்றிய காலத்தில் இருந்து மாற்றங்களுக்குக் காரணமான எத்தனையோ சிந்தனையாளர்களை, புரட்சியால் இந்தப் பூமியைச் சிவக்க வைத்தப் போராளிகளை, ஓடும் காலத்தைத் தன் திசைக்குத் திருப்பிய சாதனையாளர்களை வரலாறு தன் பொன்னிறப் பக்கங்களில் பொறித்துக் கொண்டே இருக்கிறது. உலகத்தை மாற்றிய எல்லாப் புரட்சியாளர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு மேலாகத் தங்களை நம்பி நின்ற மக்களை நேசித்த மாசற்ற குணம். அவர்களின் வியக்கத்தக்க வீரம் கொண்ட பெரு மனிதர்கள் உண்டு. மிகச் சிறந்த கருணையும் கொடையும் மிக்கக் குணவாளர்கள் உண்டு. ஆனால் ஒரே ஒரு ஒற்றை மனிதனுக்குத் தான் தொன்மை இனமான தமிழ் இனத்திற்கே உரித்தான அறமும் வீரமும் சரிவிகிதத்தில் அமைந்து அவரைக் காலமும் நம் தலைவராய் நம் முன்னே நிறுத்தியது.

 பிரபாகரன்
வீரவேல் கொண்டு பகையைத் தாக்கிய வெற்றி சீர் முருகன், செந்தமிழ் மொழி வடிவமாகவே ஓங்கி நின்ற சிவன், குன்றாக் கொடையும், வியக்கும் வீரமும் கொண்ட சங்ககால மன்னர்கள், புலிக்கொடி ஏந்தி புவியைத் தங்கள் காலடியில் கொண்டு வந்த சோழர்கள், கடலிலே கலமேறிப் பாய்ந்து உலகமெங்கும் பரந்து சென்று தமிழனின் புகழைக் கொண்டு சேர்த்த பாண்டியர்கள், தங்கள் தாய் நிலத்தைச் சிறிதளவு கூட அந்நியனுக்குத் தர மாட்டேன் என்று அறிவித்து ஆதிக்கப் பீரங்கிகளுக்கு முன்னால் பாய்ந்து வந்த விடுதலை வீரர்கள் என்று தொடரும் மங்கா தமிழ் இனத்தின் மரபணு தொடர்ச்சிதான் எங்களது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
நம் தாய்நிலமான தமிழ் ஈழத்தில் வந்து குடியேறி நம்மை அண்டிப் பிழைக்க வந்த சிங்களன், கால ஓட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து மண்ணின் ஆதிகுடிகளான தமிழர்களின் உரிமைகளைப் பறித்து, உடைமைகளை அழித்து, நிலத்தைப் பிடித்து, உயிரை எடுத்து இனத்தை அழிக்கும் போது தான் தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்கக் காலம் தந்த கரிகாலனாய் களத்தில் தோன்றியவர் என்னுயிர் அண்ணன் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
“உயிர் உன்னதமானது என்பதனை நான் அறிவேன்; ஆனால், அந்த உயிரினும் உன்னதமானது எமது உரிமை; எமது விடுதலை; எமது கௌரவம்” என முழங்கிய எம் தலைவர், உயிர் பயம் தான் மனிதனின் ஆகப்பெரும் பலவீனம் என்பதையும் அறிவித்தார். உயிர் பயத்தை வென்று விட்டால் உலகத்தில் எந்த ஆதிக்கத்தையும் வெல்லக்கூடிய வலிமை கிடைத்துவிடும் என்பதைச் சரியாக உணர்ந்து உயிரை ஒரு குப்பிக்குள் அடைத்து, எந்த நொடியிலும் வரத் தயாராக இருக்கும் மரணத்தை ஒன்றுக்கு இரண்டாகத் தன் மார்பிலே தொங்க விட்டுக்கொண்டு, 'ஒரு வேளை இலட்சியத்தில் இருந்து நான் தவறினால் என்னைச் சுட்டுக் கொன்று, கொளுத்தி விடு!' என அறிவித்து இலட்சியப் பற்றுறுதிக்கு இலக்கணமானவர் எம் தலைவர்.
சிங்கள ஆதிக்கத்தாலும், தமிழர்களின் அடிமை உணர்ச்சியினாலும் வீழ்ந்து கிடந்த போது, அந்த மக்களை ஒன்றாகத் திரட்டி பயிற்சி கொடுத்து சொந்த நாட்டு மக்களையே படையாகக் கட்டி பகை நடுங்க தரைப்படை கண்டு, கடலேறிப் பாயக் கடற்படை கொண்டு, விண்ணேறி பறக்க வான்படை கண்ட எங்கள் பெருமகன் தமிழினத்தின் திருமகன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். வீரத்தில் மட்டுமா, அறத்திலும் இப்படிப்பட்ட ஒரு மனிதர் உண்டா என உலக வரலாறு எங்கள் தலைவரை வியந்து பார்த்தது. எங்களுக்கு எங்களை அடிமைப்படுத்த முயலும் சிங்கள இராணுவம் தான் எதிரியே ஒழிய, அப்பாவி சிங்கள மக்கள் அல்ல, என அறிவித்து ‌தாக்குதலுக்கு விரைந்து செல்லும் மக்கள் தேசிய இராணுவமான விடுதலைப் புலிகள் வீரர்களிடத்தில் அப்பாவி சிங்கள மக்கள் பலியாகி விடக் கூடாது என்பதை உறுதியாக வலியுறுத்தி மறம் விளைந்த மண்ணில் அறம் பாடி நின்ற சான்றோன் எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். உலகத்தின் பேரிலக்கியங்களிலும், மகத்தான காவியங்களிலும் மட்டுமே காணப்படக்கூடிய அதிமனிதராக‌ நம் கண்முன்னே வாழ்ந்த என் உயிர் அண்ணன் நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்  திகழ்ந்தார்கள். ஒரு பழுதடைந்த ஒற்றைத் துப்பாக்கியோடு இனத்தின் அவலம் தீர்க்க வனம் ஏறிச் சென்ற எங்கள் தலைவர் தன் உயிரையே ஆயுதமாகக் கொண்டு போராடும் பெரும் படையைக் கட்டி அறுபடை கண்ட எங்கள் முப்பாட்டன் முருகனைப் போல அறுபடை கண்ட காவியத்தலைவன் எம் தேசியத்தலைவர் அவர்கள்.
உலகத்தின் மூத்த இனமான தமிழ் இனத்திற்கு இறையாண்மை கொண்ட உள்ளங்கை நாடு கூட இல்லை என்பது அவமானகரமானது. எல்லா தேசிய இனங்களின் இலட்சியக் கனவும் தங்களுக்கென ஒரு நாடு அடைவதே. அப்படி ஒரு வாய்ப்பு தமிழர்களுக்குச் சிங்கள வல்லாதிக்கத்தால் ஏற்பட்டது. உலக நாடுகளை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு பெரும்படை கட்டி தமிழர்களை வீழ்த்த வந்த சிங்களன் நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்கின்ற மாமனிதர் பார்த்துப் பார்த்து செதுக்கி கட்டிய விடுதலைப் புலிகள் என்கின்ற மக்கள் இராணுவத்திற்கு முன்னால் தோற்று ஓடினான். ஓயாத அலைகளாய் பாய்ந்து வந்த புலிகள் தமிழரின் தாய் நிலத்தைத் தலைவரின் ஆணைக்கு ஏற்ப மீட்டனர்.  இப்படி ஒரு நாடு உலகில் இதுவரை தோன்றியதில்லை என வியக்கும் அளவிற்கு நம் தேசியத்தலைவர் தமிழீழ சோசலிச குடியரசு நாட்டினைக் கட்டி எழுப்பினார். விடுதலைப் பெற்ற சுதந்திர நாட்டில் வாழ்வதாக நினைத்துக் கொள்கிற தாயகத் தமிழர்கள் இன்னும் சாதிப்பிடியிலும் மத ஆதிக்கத்திலும் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறார்கள். நம் அன்னை தாய்மொழி அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மிகச் சரியாக உணர்ந்த நம் தேசியத்தலைவர் சாதி மதப் பேதமற்ற ஒரு சமூகத்தைத் தமிழர் என்கின்ற ஒற்றுமை உணர்வோடு கட்டி எழுப்பினார். தலைவர் எழுப்பிய தமிழீழத்தில் தமிழன்னை அரியணையில் ஏறி அமர்ந்தாள். வீதிகளில் தமிழ், கோவில்களில் தமிழ், நீதிமன்றங்களில் தமிழ், மழலையர் கல்வி தொடங்கிப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அனைத்தும் தமிழ் மொழியிலேயே தாய்மொழி கல்வி, அழகிய தமிழ்ச் சொற்களால் அறிவிப்புப் பலகைகள், சூழலியல் சார்ந்த சிந்தனைகள், தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என தலைவர் தமிழீழ நாட்டை ஒரு கனவு நாடாக, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஒரு சிற்பி அழகிய சிலையைச் செதுக்குவது போல உருவாக்கினார்.

அறநிலையத்துறை யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது? சீமான் காட்டம்!!
ஆணுக்குப் பெண் சமம் அல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்பதை அகிலத்திற்கு அறிவிக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆணைப்படி ஆண்களைப் போலவே பெண் புலிகளும் ஆயுதம் தரித்துக் களத்திலே நின்று ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டி வீர வரலாறாக மாறிப்போனார்கள். மாவீரர் துயிலுமிடத்தில் சாதி கடந்து, மதம் கடந்து தமிழர்களாய் வீர மறவர்கள் விதையாகி புதைந்தார்கள். நள்ளிரவில் ஒரு இளம்பெண் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக வீதிக்கு சென்று விட்டு தமிழீழ மண்ணில் வீட்டுக்குத் திரும்பினாள். குற்றங்களைத் தடுப்பது எமது நோக்கம் அல்ல. குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என்று அறிவித்து ஒழுங்குணர்வுமிக்க ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பினார் எம் தலைவர். தன் குடும்பத்திற்குப் பதவி வாங்க அலையும் தலைவர்கள் மத்தியில் தான் பிறந்த தமிழினத்திற்காகத் தன் குடும்பத்தின் மூன்று தலைமுறையும் பலி கொடுத்து 'ஈகம்' என்ற சொல்லுக்கும், 'தமிழினத் தலைவர்' என்ற சொல்லுக்கும் இலக்கணம் வகுத்தவர் என் உயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் அடிமைத் தேசிய இனமான அன்னை தமிழ் இனத்திற்குத் தலைவராக எப்போதும் இருக்கும் தகுதி தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அறமும், வீரமும் நிறைந்த அவரது வாழ்க்கைதான் எங்களது வழிகாட்டியாக எங்கள் இலட்சியப் பயணத்தில் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இருள் மிகுந்த இன்னல்களில் அதுதான் மின்னலாக ஒளிர்ந்து எங்களை வழி நடத்துகிறது. அந்த தியாகப் பெருவாழ்க்கை தான் எங்களது கொள்கை சாசனம்.
தனிப்பட்ட என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் எனக்குள்ளாக இருக்கின்ற உயிராற்றலாக என் உயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தான் விளங்குகிறார். சுற்றி சுழன்று அடிக்கும் அவதூறு புயல்களுக்கு மத்தியில், ஆதிக்க அரசு அதிகாரத்தின் கொடுங்கோன்மைகளுக்கு மத்தியில் நான் நிலைத்து நிற்பதற்கான மன உறுதியை அவரிடத்திலிருந்துதான் எடுத்துக் கொள்கிறேன். நான் திரும்பும் திசையெல்லாம் அவரது முகமே இருக்கிறது. அவரிடமிருந்து தான் சமரசம் இல்லாமல் போராடும் வலிமையையும், இலட்சியப் பாதையில் இருந்து மாறாத கொள்கை பற்றுறுதியையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உலக வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத ஒரு சிற்றூரில் பிறந்த என்னை இன விடுதலைக்கான கருவியாக மாற்றி, இடையறாது இயங்க வைக்கின்ற பேராற்றலாக என் உயிர் அண்ணன் என் தலைவர் பிரபாகரன் அவர்களே திகழ்கிறார். எந்தப் புனித இலட்சியக் கனவிற்காக என் உயிர் அண்ணன் எங்கள் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் களமாடி நின்றாரோ, அந்தக் கனவிற்காக எம் உயிர்த்துளி உள்ளவரை சமரசம் இல்லாமல் உறுதியாகப் போராடுவோம் என அவர் பிறந்த நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70வது பிறந்தநாளில் உலகமெங்கும் பரவி வாழும் பேரன்பிற்கினிய  தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web