கோவில்பட்டியில் பரபரப்பு... காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று பாஜக எம்பிக்கள் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிலர் தாக்கப்பட்டதாக இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பாஜக எம்பிக்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் மெயின் பஜாரில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற வழக்கறிஞர் அய்யலுச்சாமியைத் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை அவரிடம் இருந்து பிடுங்கினர். இதையடுத்து அவர் மற்றும் சில காங்கிரஸ் கட்சியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து வழக்கறிஞர் அய்யலுச்சாமியை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, முன்னாள் தலைவர் முருகன், அய்யனாருத்து ஊராட்சி மன்ற தலைவர் சந்தன பாண்டியன் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!