அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியல்.. இந்த வருடமும் ஷிவ் நாடார் முதலிடம்!
அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியலில் இந்த வருடமும் ஹெச்சிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார்.
எடல்கிவ் ஹுருன் இந்தியா என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஏழைகளுக்கு அதிக அளவில் உதவி செய்வோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-ம் நிதியாண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் (79) குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
இவரது குடும்பம் 2024 நிதியாண்டில் மட்டும் ரூ.2,153 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் சிவ நாடார். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பமும் (ரூ.407 கோடி), மூன்றாவது இடத்தில் பஜாஜ் குடும்பமும் (ரூ.352 கோடி) இடம் பெற்றுள்ளது.
நன்கொடையாளர் பட்டியலில் முதல் பத்து இடங்களில், குமாரமங்கலம் பிர்லா குடும்பம் (ரூ.334 கோடி), கவுதம் அதானி குடும்பம் (ரூ.330 கோடி), நந்தன் நிலேகனி (ரூ.307 கோடி), கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி), அனில் அகர்வால் குடும்பம் (ரூ.181 கோடி), சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி (ரூ. 179 கோடி), ரோகிணி நிலேகனி (ரூ.154 கோடி) ஆகியோரும் உள்ளனர்.
இந்த ஆண்டு 203 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில், 96 பேர் புதிய நன்கொடையாளர்கள். அவர்கள் மட்டும் ரூ. 8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 55 சதவீதம் அதிகம் ஆகும்.
தனிப்பட்ட நபர்களின் நன்கொடையை மட்டும் கணக்கில் கொண்டாலும், சிவ நாடார் ரூ.1,992 கோடி நன்கொடையுடன் முதலிடத்தில் உள்ளார். நந்தன் நிலேகனி மற்றும் கிருஷ்ணா சிவுகுலா அடுத்த இடங்களில் உள்ளனர்.