அதிர்ச்சி! மருத்துவமனைகளில் மருந்து பாட்டில்களுக்கு பதில் பீர் பாட்டில்கள்..!

 
அதிர்ச்சி! மருத்துவமனைகளில் மருந்து பாட்டில்களுக்கு பதில் பீர் பாட்டில்கள்..!

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் லக்னோவில் கொரோனாவின் 2 அலைகளிலும் பரவல் அதிகமாக இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கி சிகிச்சை பெற்றனர். இதில், பெரும்பாலான மருத்துவமனைகள் பல மடங்கு கட்டணத்தை வசூலித்ததாக புகார்கள் அதிக அளவில் குவிந்தன.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், லக்னோவின் 45 தனியார் மருத்துவமனைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் லக்னோ மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்பல குழுக்கள் ஒரே நேரத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தின. இதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அரசு உரிமம் இல்லாமலேயோ அல்லது அரசு உரிமம் புதுப்பிக்கப்படாமலேயோ பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தனியார் மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் இல்லை. ‘நியூ ஏசியன் ஹாஸ்பிடல் அண்ட் டர்மா சென்டர்’ என்ற மருத்துவமனையில் பிஎஸ்சி. பயின்றவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மேலும் செவிலியர் பணியில் அதன் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனை நடத்தப்பட்ட பல மருத்துவமனைகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் மருந்துகளுக்கு பதிலாக பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் அதிநவீன சிகிச்சை பிரிவில் எக்ஸ்ரே உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

மருத்துவமனைகளில் இருந்த பல மருந்துக் கடைகளுக்கு உரிமம் பெறப்படவில்லை. அரசால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக படுக்கைகள் மருத்துவமனைகளில் இருந்ததும் கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் எதுவும் பல மருத்துவமனைகளில் பதிவாகவில்லை.

இந்த வகையான மருத்துவமனைகளை உடனடியாக மூடுமாறு லக்னோ மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்ற சில மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

From around the web