அதிர்ச்சி... கோவையில் கட்டுக்கட்டாக ரூ.2.25 கோடி பறிமுதல்... லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்!
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவருடைய வீட்டில் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக பதுக்கப்பட்ட ரூ.2.25 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தடையை மீறி லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து தங்களது கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று கோவை கருமத்தம்பட்டி பகுதியில் சென்னியாண்டவர் கோயில் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர் எனத் தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் சென்னியாண்டவர் கோயில் அருகேயுள்ள பாலாஜி நகரைச் சேர்ந்த நாகராஜ்(42) எனத் தெரிய வந்தது. அதன் பின்னர் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.2.25 கோடி பணமும், 1,900 லாட்டரி சீட்டுகளையும் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதில் 112 பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2,000 மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்களும் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரூ.2.25 கோடி பணத்தையும், லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிலம் விற்பனை செய்ததில் கிடைத்த பணம் எனக்கூறியுள்ளார். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதையும் அவர் சமர்பிக்கவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘நாகராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கேரள மாநிலம் வாளையாறில் உள்ள லாட்டரி சீட்டுக் கடையில் காசாளராகவும், விற்பனையாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். அங்கிருந்து லாட்டரி சீட்டுகளை எடுத்து வந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளார்.
வீட்டில் அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்துள்ளார். அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’என்றனர். மேலும் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!