கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற சினிமா துணை நடிகர்கள் 5 பேர் கைது!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக சினிமா துணை நடிகர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், சுங்கம் - உக்கடம் புறவழிச்சாலையில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் வழித்தடத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்கள் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்பவர்கள் எனத் தெரிந்தது. அவர்களிடமான தொடர் விசாரணையில், பிடிபட்டவர்கள் கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த யாசிக் இலாஹி(26), போளுவாம்பட்டியைச் சேர்ந்த மரியா(31), கரும்புக்கடையைச் சேர்ந்த முஜிப் ரகுமான்(27), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(24), சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சினேகா(31) ஆகியோர் எனத் தெரிந்தது.
இவர்களில், யாசிக் இலாஹி, மரியா, சினேகா ஆகியோர் சினிமாவில் துணை நடிகர்களாக பணியாற்றி வருவது தெரிந்தது. மற்றவர்கள் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மேற்கண்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், இவ்வழக்கில் செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடையைச் சேர்ந்த ஆஷிக் செரிப், ரிஸ்வான், வடமாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா