இன்று ஸ்மார்ட் கார்டு அறிமுகம்... அரசு பேருந்துகளில் இனி டிக்கெட் எடுக்க தேவையில்லை!
![மெட்ரோ பேருந்து](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/c676602af7321cadcb814c13e61da218.webp)
இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க தேவையில்லை. சில்லறை பிரச்சனையும் எழாது. இன்று ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் பொதுப் போக்குவரத்தை பொறுத்தவரை மெட்ரோ, புறநகர் மின்சார ரயில் சேவை, மாநகர பேருந்துகள் என 3 வகையாக செயல்பட்டு வருகின்றன. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்றன.
தற்போது, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில், பேருந்து என 3 வகையான பொதுப்போக்குவரத்தை ஒருவர் பயன்படுத்தினாலும் மூன்றிற்கும் தனித்தனியாக டிக்கெட் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. இப்படி தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதற்கு பதிலாக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பொதுப்போக்குவரத்தையும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புறநகர் ரயில்வே நிர்வாகத்துடன் இதுகுறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் மெட்ரோ ரயில்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஜனவரி 6ம் தேதி முதல் மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது.
இத்திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்லவன் பணிமனையில் தொடங்கி வைக்கிறார். இன்று முதல் மெட்ரோ ரயில்கள் மட்டும் இன்றி பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கார்டை மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மெஷினில் ஸ்கேன் செய்து கொள்ளலாம். அதே போல் அரசு பேருந்து நடத்துனர்களிடம் உள்ள ஸ்கேன் மெஷினில் ஸ்கேன் செய்து பயணத்தை தொடரலாம். இனி டிக்கெட் எடுக்கும் போது சில்லறை இல்லை என கவலை இல்லை. முதல் கட்டமாக 50,000 அட்டைகள் ஸ்டேட் வங்கி மூலம் கட்டணம் இன்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் நாளை முதல் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!