சொத்துக்காக சுத்தியலால் தாயைக் கொடூரமாக கொன்ற மகன்... ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் அனுமன்பள்ளியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பெண் ஒருவர், சொத்து பிரச்சனையின் காரணமாக தனது இரண்டாவது மகனால் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுமன்பள்ளியைச் சேர்ந்த தனபாக்கியம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவார். அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் செயற்பட்டு வருகிறார். இவர்களுக்கு செந்தில், சந்தோஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் செந்தில் மனைவியுடன் தனியாக வசித்து, புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக தனபாக்கியமும், கிருஷ்ணமூர்த்தியும் நிதி உதவி செய்து வந்தனர். இதை அறிந்த இரண்டாவது மகன் சந்தோஷ், “அண்ணன் கட்டும் வீட்டை எனக்கே எழுதி தா” என்று தாயிடம் அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
தனபாக்கியம் இதனை ஏற்காமல், “மற்ற சொத்துக்களை உனக்கே எழுதி தருகிறோம்” என கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த சந்தோஷ், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து தாயுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு, வழக்கம்போல் மதுபோதையில் வீடு திரும்பிய சந்தோஷ், தாயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்தில் அவர் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து தாயின் முகம் மற்றும் தலையில் அடித்துள்ளார். கடுமையான காயங்களால் தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் தாய் உயிரிழந்ததை உணர்ந்த சந்தோஷ் தப்பி ஓடினார். வீட்டிற்கு பின்னர் வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியின் பரிதாபகரமான நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த அனுமன்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தனபாக்கியத்தின் உடலை மீட்டு ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தாயை கொலை செய்து தப்பிய சந்தோஷ்குமாரை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு தீவிரமாக தேடிவருகிறது. தாயைக் கொன்ற மகன் சொத்துக்காக மிருகமாக மாறிய சம்பவம் ஈரோடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
