நடத்தையில் சந்தேகம்... காதல் மனைவியை அடித்தேக் கொன்ற கணவன்!
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் அதீத சந்தேகப் புத்தி எவ்வாறு ஒரு கொடூரமான குற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்குச் சான்றாக, விழுப்புரம் அருகே நடத்தேசந்தேகத்தின் காரணமாகத் தனது காதல் மனைவியின் தலையில் மின்மோட்டாரால் அடித்துக் கணவனே கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (34). இவருக்கும் சிவரஞ்சனி (34) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த காதல் தம்பதியினர் தங்களது வாழ்வாதாரத்திற்காகச் சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊரான பேரங்கியூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

சொந்த ஊருக்கு வந்தது முதலே, மனைவி சிவரஞ்சனியின் நடத்தையின் மீது சரத்குமாருக்குத் தீவிரமான நடத்தேசந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு இவர்களுக்குள் வீட்டில் கடுமையான வாக்குவாதமும், குடும்பத் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சரத்குமார், வீட்டில் இருந்த கனமான மின் மோட்டாரை எடுத்துத் தனது மனைவி என்றும் பாராமல் சிவரஞ்சனியின் தலையில் ஓங்கி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதில் மண்டை உடைந்த சிவரஞ்சனி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கிராம மக்கள் கொடுத்த ரகசியத் தகவலின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவரஞ்சனியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவாக முயன்ற கணவன் சரத்குமாரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பேரங்கியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
