தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு... மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது தான் காரணம்.. பாமக ராமதாஸ் கண்டனம்!

 
ஸ்டாலின் ராமதாஸ்

மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதன் விளைவாக தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்ற விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. படகு கோளாறால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைக் கூட சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் இலங்கை

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒருபோதும் இந்திய - இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் தங்களின் படகில் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் ஆந்திர மீனவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் வழியில் நெடுந்தீவு அருகில் அவர்களின் படகு பழுதடைந்தது. பழுதடைந்த படகை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றி உதவி செய்வது தான் கடற்படைகளின் வழக்கமாகும். ஆனால், தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அணுகும் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. மீனவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டது தவறு.

இலங்கை மீனவர்கள்

இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதை இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போராகக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு காரணம் ஆகும்.

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web