மாணவிகளுக்கு 'குட் டச், பேட் டச்' சொல்லிக் கொடுத்த ஆசிரியர்... கொந்தளித்த மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

உத்திரப்பிரதேச மாநிலம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு பேர் போன மாநிலமாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த சம்பவம் தெரிய வந்த நிலையில், பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் ‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பல மாணவிகள் ஆசிரியரிடம், மற்றொரு ஆசிரியர் தங்களை அந்த இடங்களில் அடிக்கடி தொட்டு தடவி வந்ததாகவும் மழலை மொழியில் கூறியதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை ஆசிரியர் ஒருவாரு யூகித்து இது குறித்து புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட ஆசிரியரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், இந்த சம்பவம் தெரிய வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமத் தலைவர் தலைமையில் ஏராளமான பெற்றோர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து கிராமத் தலைவர் ரூப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' பற்றி பேசுவதற்காக மற்றொரு ஆசிரியர் மாணவர்களை சந்தித்தார். உரையாடலின் போது, 'மோசமான தொடுதல்' என்று வரையறுக்கப்பட்டதைக் குறிப்பிடும் குழந்தைகள், அவர்களின் மற்ற ஆசிரியர் அவர்களுடன் அடிக்கடி இப்படியான மோசமான தொடுகை மூலம் தங்களைத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்” என்றார்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் நீண்ட காலமாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' என்பது பல பள்ளிகளில் சிறுவயதிலேயே கற்பிக்கப்படுகிறது, ஏனெனில் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன என்பதை குழந்தைகள் உடனடியாக அடையாளம் காண மாட்டார்கள்.
லலித்பூரின் தல்பேஹாட்டில் உள்ள காவல் நிலையம் முன்பு மாணவர்கள் உட்பட பெரும் கூட்டம் திரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியது. இதை பள்ளி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மறைக்க முயன்றதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.