அடுத்த அதிர்ச்சி... ‘45 நாட்களாக தூக்கமில்லை’ - பணி அழுத்தம் காரணமாக பஜாஜ் நிறுவன ஊழியர் தற்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக பணிபுரிந்து வந்த தருண் சக்சேனா பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 42.
நேற்று காலை ஜான்சியில் உள்ள தனது வீட்டின் அறையில் தருண் இறந்து கிடந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மற்றொரு அறையில் அடைத்து வைத்திருந்தார். அவருக்கு பெற்றோர், மனைவி மேகா மற்றும் குழந்தைகள் யாதர்த் மற்றும் பிஹு உள்ளனர். தருண் சக்சேனா கடந்த இரண்டு மாதங்களாக கடினமான இலக்குகளை அடையுமாறு நிறுவனம் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பளப் பிடித்தம் செய்வதாக மிரட்டியதாகவும் அடிக்கடி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பஜாஜ் பைனான்ஸ் இன்னும் பதிலளிக்கவில்லை.
தருண் தனது மனைவிக்கு அனுப்பிய ஐந்து பக்க கடிதத்தில், தன்னால் முடிந்தவரை முயன்றும் இலக்குகளை அடைய முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். தருண் தனது பகுதியில் இருந்து பஜாஜ் ஃபைனான்ஸ் கடன்களின் இஎம்ஐ-களை வசூலிக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் பல சிக்கல்கள் காரணமாக அவரால் இலக்குகளை அடைய முடியவில்லை. எனவே அவர் தனது வேலையை இழக்க நேரிடும் என்று கவலை அடைந்ததாகவும், மூத்த அதிகாரிகள் தன்னை பலமுறை அவமானப்படுத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
அவரின் தற்கொலை குறிப்பில், “நானும், எனது சக தொழிலாளர்களும் எங்கள் பகுதியில் திரும்ப வராத இஎம்ஐகளுக்கு பணம் செலுத்தினோம். பணத்தை திரும்பப்பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மூத்த அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்தோம். ஆனால் அவர்கள் எனது பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. நான் 45 நாட்களாக தூங்கவில்லை, சாப்பிடவும் இல்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். எந்த விலை கொடுத்தாலும் இலக்குகளை அடையும்படி அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி மூத்த மேலாளர்கள் என்னை வற்புறுத்துகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன், நான் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டேன், நான் செல்கிறேன்.
எனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை இந்த ஆண்டு இறுதி வரை செலுத்திவிட்டேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்க எல்லாரும் மேகா, யதார்த், பிஹூவை பார்த்துக்குங்க. அம்மா, அப்பா உங்களிடம் நான் எதுவும் கேட்டதில்லை, இப்பதான் கேட்கிறேன். தயவு செய்து என் குடும்பம் வசதியா இருக்க ரெண்டாம் தளத்தை கட்டிக் கொடுங்க. என் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்கவேண்டும். என் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது மூத்த அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும்படி அவரது குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டார். தனது தற்கொலை முடிவுக்கு அவர்களே பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
தருணின் பிரேத பரிசோதனை தயாராகி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கவுதம் தெரிவித்தார். "மூத்த அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடமிருந்து புகார் வந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!