உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா... கூச்சலிட்டு அலறிய இளம்பெண்!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான யாத்திரைவாசிகள் தினமும் வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல் யாத்திரைவாசிகளில் சிலரும், சுற்றுலா பயணிகளும் கடலில் மட்டும் நீராடி விட்டு செல்வர். இவ்வாறு கடலில் குளித்து முடித்த பின் பெண்கள் உடை மாற்றுவதற்கு என தனியார் உடைமாற்றும் அறைகள் சில உள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் குடும்பத்தினர் நேற்று ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு அதன் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறைக்கு ஈர துணியினை மாற்றி விட்டு சென்றனர். அப்போது அங்கிருந்த டீ மாஸ்டர், வயதானவர்களை ஒரு அறைக்கும், இளம் பெண்களை மற்றொரு அறைக்கும் சென்று உடை மாற்ற கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒருவித தயக்கத்துடன் உடை மாற்றும் அறைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், உடை மாற்றும் அறை பாதுகாப்பானதா என பார்த்துள்ளார். அப்போது சுவற்றின் இடையே கேமரா பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறிவிட்டார். உடனடியாக அந்த கேமராவினை எடுத்து வந்து தனது தந்தையிடம் கொடுத்தார். அவர் தன்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து டீ கடை உரிமையாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் டீ மாஸ்டர் மீரான் மைதினை அடித்து வெளுத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தியிருந்த ராஜேஷ் கண்ணனையும், டீ மாஸ்டர் மீரான் மைதீனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
இந்நிலையில், உடை மாற்றும் அறையில் உள்ள கருப்பு டைல்ஸுக்கு மத்தியில் வைக்க கருப்பு கலரிலான கேமராவை ஆன் லைன் மூலம் வாங்கியதாகவும், இதில் பதிவான காட்சிகளை மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்வதுடன் அடிக்கடி மெமரி கார்டுகளை மாற்றியும் படம் பிடித்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருக்கும் மெமரி கார்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் புனித தலத்திற்கு வரும் பெண்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!