தில்லாலங்கடி பெண் இன்ஸ்பெக்டர்.. புகார் கொடுக்க வந்தவர்களின் 95 சவரன் நகைகளை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த திருட்டு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (50). இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பணி மாறுதலாகி கடந்த பிப்ரவரி மாதம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆனார். இவருடைய கணவர் சரவணன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு தம்பதி இடையேயான குடும்ப பிரச்சினை புகாராக வந்தது. திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிநயா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது. ராஜேஷ் -அபிநயா தம்பதியிடம் இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வந்தார். இளம்பெண் அபிநயா, தன் திருமணத்தின் போது கணவர் வீட்டாரிடம் கொடுத்த 95 பவுன் நகைகளை திருப்பி வாங்கி தரும்படி கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பின்பு வாலிபர் ராஜேஷ், 95 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
நகையை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, அந்த நகைகளை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். தொடர்ந்து அபிநயா தரப்பினர், ராஜேஷிடம் நகைகளைத் தரும்படி கேட்டுள்ளனர். நான் நகைகளை இன்ஸ்பெக்டரிடம் அப்போதே கொடுத்து கொடுக்கச் சொல்லி விட்டேன் என்று அபிநயாவின் உறவினர்களிடம் ராஜேஷ் கூறியுள்ளார்.
அதன் பின்னர் மனைவி குடும்பத்தினரிடம் நகைகள் சென்று சேராததை அறிந்த ராஜேஷ், இது குறித்து இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் அளிக்காமல் மழுப்பி வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் இது குறித்து புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா கொஞ்சம், கொஞ்சமாக நகைகளை திருப்பி தந்தார். மீதி 38 பவுன் நகைகளை திருப்பி தரவில்லை. இது குறித்து ராஜேஷ், மீண்டும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி விசாரணை நடத்தி, திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீதி நகைகளை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து அவரை திருமங்கலம் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு வந்த தம்பதியிடம் நகைகளை மோசடி செய்த பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!