திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகர இணை ஆணையர் (டிஜிபி) ஆகியோர் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்றத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி இந்த வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் வாதிடுகையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், "கோவில்களில் எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என நீதிமன்றம் கூடச் சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய முடியும். சட்ட ஒழுங்கைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. உங்கள் கோரிக்கையை (வழக்கை ஒத்திவைக்க) ஏற்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போது ஒத்திவைக்க இயலாது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகர இணை ஆணையர் (டிஜிபி) ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
