திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் - அமைச்சர் ரமேஷ் அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலித்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வைத் தொடர்ந்து, கோயிலின் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் தினமும் பல்லாயிரக்கணக்கானோரும், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, விரைவாகச் சுவாமி தரிசனம் செய்து வைக்கத் தலா ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த விஐபி தரிசன லஞ்சப் பணத்தில் கோயில் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பங்கு போவதாகப் பக்தர்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களின் உண்மைத்தன்மையை அறிய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரிவிக்காமல், சாதாரண பக்தரைப் போலக் வரிசையில் நின்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விரைவு தரிசனத்திற்குப் பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிப்பது கதிர்வீச்சாக அப்பட்டமாகத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக, முறைகேட்டில் ஈடுபட்ட திருச்செந்தூர் கோயில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ் (Dismiss) செய்யப்பட்டனர். மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, அர்ச்சகர் ஐயப்பன் என்பவர் கோயிலில் பூஜை செய்யத் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையாகக் கோயில் உயர் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகத் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் புதிய இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்குப் பணிபுரிந்த உதவி ஆணையர் மெய்வேல் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உதவி ஆணையர் லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த திருச்செந்தூர் கோயில் துணை ஆணையர் பணியிடத்திற்கு, திருச்சி நகை சரிபார்ப்புத் துணை ஆணையர் யக்ஞா அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த நடவடிக்கை மற்றும் அதிகாரிகளின் கூண்டோடு மாற்றம், திருச்செந்தூருக்கு வரும் சாமானிய பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
