அமாவாசை தினத்தில் எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள்?!

 
அமாவாசை
முன்னோருக்கு உகந்த தை அமாவாசை தினத்தில் தானங்கள் செய்வதும் முன்னோரை வணங்குவதும் எண்ணிலடங்காத பலன்களை நமக்கு வழங்கும். இதுவரை பட்ட துன்பங்களில் இருந்து எல்லாம் நிம்மதியும் நிறைவும் பெற்று வாழ்வில் உயரலாம் என்கிறார்கள். 

பித்ருக்களுக்கான முக்கியமான நாட்களில், அமாவாசை தினம் மிக மிக விசேஷமானது என்கிறது சாஸ்திரம். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்கத்தில் தை மாதத்தில் வருகிற தை அமாவாசை, தட்சிணாயன புண்ய காலத்தையொட்டி வருகிற ஆடி அமாவாசை, அதன் இரண்டு புண்ய காலங்களுக்கு நடுவே புரட்டாசி மகாளயபட்ச காலத்தில் வருகிற புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிக மிக சாந்நித்தியம் மிக்கவை.

தை அமாவாசை என்பது ரொம்பவே முக்கியம். இந்தநாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபடலாம். தர்ப்பணம் செய்யலாம். முன்னோர் ஆராதனை செய்து வழிபடலாம். மற்ற நாட்களில் இப்படி நீர்மார்க்கத்தில் நீராடினாலே புண்ணியம். குறிப்பாக, அமாவாசை நாளில், நீராடுவது மகா புண்ணியம்!

அமாவாசை

அமாவாசை நாளில், நாம் செய்கிற தர்ப்பண ஆராதனைகள், முன்னோர்களுக்கான வழிபாடுகள், செய்கின்ற தான தருமக் காரியங்கள் என பலவற்றாலும் பித்ருக்கள் நம் செயலால் குளிர்ந்து போகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

பொதுவாகவே, நாம் எப்போது தானம் செய்தாலும் புண்ணியம். தரும காரியங்களை எந்தநாளில் செய்து வந்தாலே முந்தைய பிறவியின் பாவங்கள் நீங்கப் பெறும் என்கின்றன சாஸ்திரங்கள். முக்கியமாக, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளன.

அமாவாசை நன்னாளில், நம் முன்னோரை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம் தானியம் பெருகும். கடன் பிரச்சினையில் இருந்து மீளலாம். யாருக்கேனும் வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.

அமாவாசை தினத்தில், யாருக்கேனும் தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்தாலும் மிகப்பெரிய புண்ணியம். சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளருவார்கள், வாழ்வார்கள்!

யாருக்கேனும் தீபம் மற்றும் விளக்கு தானமாக வழங்கினால், நம்மிடம் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல், அரிசியை தானமாகத் தந்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். எவருக்கேனும் நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். நம் மனதில் இதுவரை இருந்த மனக்குழப்பமும் வருத்தமும் மறையும். தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் நீடிக்கும்.

அமாவாசை தினத்தில் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!

பழங்களை எவருக்கேனும் தானமாக வழங்குங்கள். புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும். செய்யும் காரியங்களில் உறுதியான நிலைப்பாடு கொள்வீர்கள். தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி. எவருக்கேனும் தேங்காய் தானமாக வழங்கினால், எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும்.

நாளை புதன்கிழமை 29ம் தேதி தை அமாவாசை. உத்தராயன காலத்தின் மிக முக்கியமான அமாவாசை. இந்தநாளில், தர்ப்பண காரியங்கள் செய்வோம். முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு அவர்களை வணங்குவோம். வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களுக்கு தனியே படையலிட்டு பிரார்த்தனை செய்வோம். முக்கியமாக, காகத்துக்கு உணவிடுவோம். நம்மால் முடிந்த தானங்களைச் செய்து, சகல செளபாக்கியங்களுடன் வாழ்வோம்!

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web