‘ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா? உலக கோப்பைப் போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்!
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இன்றைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி விளையாடும் என்பதால் போட்டி பரபரப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 13வது உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா ஒருமுறை மோதும் லீக் முறையில் நடைபெறும் இத்தொடரில் முதல் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இதுவரை இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கையை 59 ரன்னிலும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 88 ரன்னிலும் வீழ்த்தியது. ஆனால் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு உண்மையான சவாலாக அமைய இருக்கிறது.

மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இந்தியா தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மோத வேண்டும். அதில் முதற்கட்டமாக தென்ஆப்பிரிக்காவுடன் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 10வது லீக் ஆட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் இந்தியாவின் மிடில் வரிசை மற்றும் பீல்டிங் பலவீனமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பல கேட்ச் வாய்ப்புகள் தவறியதால் அணி அதைக் கவனத்தில் எடுத்துள்ளது.
தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா இன்னும் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்று ரன்வேட்டை நடத்தினால் அணிக்கு வலு சேர்க்கும். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, கிரந்தி கவுட், சினே ராணா சிறப்பாக விளையாடி வருகின்றனர். காய்ச்சலால் ஓய்வு பெற்றிருந்த அமன்ஜோத் கவுர் இன்றைய ஆட்டத்தில் திரும்ப வாய்ப்பு உள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியை லாரா வோல்வார்ட் தலைமையில நடத்துகிறார். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தும், அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது. தஸ்மின் பிரிட்சின் சதமும், மிலாபாவின் நான்கு விக்கெட்டும் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது.

விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்றதாக இருப்பதால் இன்று ரன்மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் 33 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 20 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் முடிந்தது.
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரனி, கிரந்தி கவுட், ரேணுகா சிங் / அமன்ஜோத் கவுர்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், மரிஜானே காப், அனேகே பாஷ், சினாலோ ஜாப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயபோங்கா காகா, நோங்குலுலேகா மிலாபா. இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்புகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
