கொண்டாட்டம்! உலக நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள்!

 
கொண்டாட்டம்! உலக நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள்!

ஜூன் 21ம் தேதி நேற்று சா்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கூடி யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனா்.
சா்வதேச யோகா தினம் டைம்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என்றாலும், கொரோனா தடைகள் நீக்கப்பட்ட பின்னா் அதிக அளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. இங்கு புகழ்பெற்ற யோகா பயிற்சியாளா்களால் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகிய அமா்வுகள் நடத்தப்பட்டன.

சீனாவில் அங்குள்ள யோகி யோகா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைத்து எல்லைகளையும் கடக்கும் யோகாவின் உலகளாவிய தாக்கத்தை உறுதிபடுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இந்திய தூதரகம் சார்பில் காணொலி மூலம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இங்கு சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தில் யோகா குறித்து சொற்பொழிவு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் நேரலையில் ஒளிபரப்பானது.

காணொலி வழியாக நடத்தப்பட்ட விடியோ வலைப்பதிவு, கட்டுரைப் போட்டிகளில் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனா்.

சவூதி அரேபியாவில் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை, சிங்கப்பூா், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஆஸ்திரியா, பூடான் உட்பட பல நாடுகளிலும் சா்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

From around the web