உஷார்! தம்பதிகள் 60ம் கல்யாணம் செய்யறீங்களா? அப்போ மறக்காம இதைத் தெரிஞ்சுக்கோங்க!
ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய 70வது வயது தொடங்கும் போது மறக்காம பீமரத சாந்தி செய்ய வேண்டும். சரி.. அதென்னா பீமரத சாந்தி?
பீமரதன் என்பது ஒரு மிருத்யுவுடைய பெயர். அந்த மிருத்யுவினை சாந்திப்படுத்துவதற்கு உண்டான பூஜைகளுக்கு பீமரத சாந்தி.
ஒருவருக்கு அவருடைய 70 வது வயது தொடங்கும் போது இதைச் செய்ய வேண்டும். இதை ஒரு கண்டம் என்றும் சொல்லலாம். இந்த கண்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
ஒருவருக்கு அவருடைய 48, 54, 61, 70, 81 வயது முடிந்து மூன்று மாதம் கழித்து, 100வது வயதுகளில் சில பரம்பரை ரீதியிலான மரபு பிரச்சனைகளோ, சில கண்டங்களோ ஏற்படும் என்று நம் முன்னோர்கள் அனுமானித்து, அதற்கான சில எளிய பரிகாரங்களையும் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருவர் தன்னுடைய 70வது வயதில் செய்து கொள்வதற்குப் பெயர் பீமரத சாந்தி.
நமது ஆயுளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான தேவதைகளின் கட்டுப்பாட்டில் வளர்கிறோம். குழந்தை இந்த பூமியில் பிறந்து 1வது வயது வரை ஆயுர் தேவதை எனப்படும் அக்னியின் ஆட்சிக்குள் அடங்குகிறோம். அதனால் தான் அந்த ஆயுர் தேவதைக்கு ப்ரீதியாக முதல் வயது பூர்த்தி அடையும் போது ஆயுஷ்ய ஹோமம் செய்வார்கள்.
அதன் பின்னர், ஒருவர் அவருடைய 20வது வயது வரை மனிதன் பிரம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதனால் தான் ஒருவருக்கு 20 வயதிற்குள் பிரம்மோபதேசம் செய்யப்படுகிறது. 20வயதுடையவனை இளைஞன் என்று அழைக்கிறோம்.
அதன் பின்னர், 40 வயது வரை விஷ்ணுவின் ஆட்சி நடக்கிறது. ஒருவன் தானம் செய்வதற்கும், தானம் பெறுவதற்கும் தகுதியாவது இந்த கால கட்டத்தில் தான். திருமணம் செய்து கொள்ள கன்யாதானம் வாங்கிக் கொள்ளும் வாலிபனை நாராயண ஸ்வரூபனாக சாஸ்திரம் வர்ணிக்கிறது.
40வயது முதல் ருத்ரனின் கட்டுப்பாட்டிற்குள் மனிதன் வருகிறான். ருத்ரனுக்கு பல்வேறு ரூபங்கள் உண்டு. 59 வயது முடிந்து 60வது வயது துவங்கும் போது உக்ரரத சாந்தி என்று அழைக்கப்படும் உக்ரரத ருத்ரனுக்கான பூஜையை செய்ய வேண்டும். 60வயது பூர்த்தி அடைந்து 61 துவங்கும் போது செய்வதை சஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி என்று சொல்கிறோம். 69 வயது முடிந்து 70வது வயது துவங்கும் போது பீமரத ருத்ரனுக்கான பூஜையை செய்கிறோம்.
77 வருடம், 7 மாதம், 7வது நாள் அன்று விஜயரத சாந்தி என்று விஜயரத ருத்ரனுக்கு ப்ரீதி செய்யும் விதமாக பூஜைகளை நடத்துகிறோம்.
80வது வயது முதல் மனிதன் மீண்டும் பிரம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். 80வது வயதில் செய்யப்படும் பூஜையானது சதாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.
