undefined

 அதிர்ச்சி... 20 நாட்களில் 2வது முறை... சென்னை சென்ட்ரலில் 1,556 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சி பறிமுதல்!

 
 

சமீபமாக மக்கள் உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யும் போக்கும், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்தி சமைப்பதும் உணவகங்களில் அதிகரித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்தி வந்தாலும் இது தொடர்கதையாகவே இருந்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 1,556 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து மலிவான விலையில் தரமற்ற இறைச்சிகள் கொள்முதல் செய்து கொண்டு வரப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று, டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தரமற்ற ஆட்டிறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் இருந்தே காத்திருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தவுடன் உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது சுமார் 1,556 கிலோ ஆட்டிறைச்சி தரமற்ற நிலையில், சுகாதாரமற்ற முறையில் அடைத்து வைத்து டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தரமற்ற 1556 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அவற்றை முறையாக அழிக்க மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். இந்த இறைச்சிகள் எந்தெந்த உணவகங்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தன உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை இப்படி தரமற்ற நிலையில் கொண்டு வரப்பட்ட 1700 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை