2 வயது சிறுவன் பாம்பு கடித்துப் பலி... படிக்கட்டில் விளையாடிய போது பெரும் சோகம்... கதறித் துடித்த பெற்றோர்!
மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகர் அருகே, வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞானேஸ்வர் தாண்ட்கே என்பவரின் இரண்டு வயது மகன் சம்பு, வழக்கம்போல வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கக் குளிர்ந்த மற்றும் இருட்டான இடத்தைத் தேடி வந்த நாகப்பாம்பு ஒன்று படிக்கட்டு ஓரத்தில் மறைந்திருந்துள்ளது. இதை அறியாத சிறுவன் ஓடியபோது, எதிர்பாராதவிதமாக அவனது கால் பாம்பின் மீது பட்டுள்ளது. இதனால் சீற்றமடைந்த பாம்பு சிறுவனைத் தாக்கியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், குழந்தையின் காலில் ரத்தம் வழிவதையும் அருகே பாம்பு இருப்பதையும் கண்டு பதறிப்போனார். உடனடியாகச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். இருப்பினும், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்தது. பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.கோடைக்காலங்களில் வெப்பம் தாங்காமல் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி வீடுகளுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடும் இடங்களைச் சுத்தமாகவும், போதிய வெளிச்சமாகவும் வைத்திருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!