undefined

 காஷ்மீரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000, ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு... காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

 
 

காஷ்மீரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

காஷ்மீரில் வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பிரசாரம் செய்தார்.

அனந்த்நாக் நகரில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசினார். அப்போது வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கினார். தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ேக.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்தியில் பேசும்போது, “காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். பொது வினியோகத் திட்டத்தில் நபர் ஒன்றுக்கு 11 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். பெண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

குடும்பம் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மன்மோகன் சிங் ஆட்சியில் அளிக்கப்பட்ட மறுவாழ்வு பணிகள் நிறைவேற்றப்படும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் உறுதி செய்யப்படும்.

காஷ்மீரில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் தற்போதைய நிர்வாகம் இந்த பணியிடங்களை நிரப்பாமல், காஷ்மீர் மக்களை ஏழைகளாகவே வைத்து இருக்கிறது. இங்கே எந்த தொழிற்சாலையையும் அவர்கள் கொண்டு வரவில்லை.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த காலியிடங்களை நிரப்புவோம். சுற்றுலா மற்றும் உற்பத்தி துறையில் கவனம் செலுத்துவோம். 4,400-க்கு மேற்பட்ட அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளை திறந்து கல்வியிலும் கவனம் செலுத்தப்படும். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கட்சி பாடுபடும். அத்துடன் இரு அவைகளை கொண்ட சட்டமன்றமும் அமைக்கப்படும்.

ஆனால் இதை எப்படி செய்வார்கள்? என பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். ஆனால் மக்கள் எங்களுடன் இருக்கும்போது அவர்களின் சக்தியை கொண்டே நாங்கள் செய்து முடிப்போம்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை