டிடிவி தினகரனுடன் அண்ணாமலை நேரில் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறினார். இந்நிலையில் டிடிவி தினகரனை பாஜக முன்னாள் தமிழக தலைவர் நேரில் சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு நேரில் சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேற்றிரவு அண்ணாமலை சென்றார். அங்கு டிடிவி தினகரனும், அண்ணாமலையும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனிடம், அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த சில நாட்களுக்குமுன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். தற்போது டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!