undefined

பாஜ நிர்வாகி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி... மகளிர் அணி தலைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள போயனூரைச் சேர்ந்த பா.ஜ கிளை தலைவர் பிரகாஷ் (38) ரூ.10 லட்சம் கடனைப் பெற்றதாகக் கூறப்படும் பாஜ மகளிர் அணி வடக்கு மாவட்டத் தலைவி பிரபாவதி (39) மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ், அன்னூர் பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த ஆண்டு பிரபாவதி, “டிரஸ்ட் தொடங்குகிறேன்” என்று கூறி அவரிடம் ரூ.10 லட்சம் பணம் கடன் பெற்றதாக பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை கேட்ட பின்னர், பிரபாவதி செக் வழங்கிய போது, அது வங்கியில் செலுத்தியபோது பவுன்ஸ் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரகாஷ் அன்னூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது மனைவி திவ்யாவுடன் அன்னூர் காவல் நிலையம் சென்ற போது திடீரென டீசல் கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் விரைந்து அவரை தடுத்து, டீசல் கேனை பறிமுதல் செய்து தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது, “நான் கொடுத்த பணம் திருப்பிக் கிடைக்கவில்லை; இதனால் மனஅழுத்தம் காரணமாக தீக்குளிக்க முயன்றேன்” என்று பிரகாஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதே வழக்கில் பிரபாவதி கோவை எஸ்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்ததும் தெரிய வந்துள்ளது. இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், “செக் மோசடி வழக்கை வாபஸ் பெறாவிட்டால் வாகனத்தில் செல்லும் போது தாக்குவோம் என பாஜ மகளிர் அணி வடக்கு மாவட்டத் தலைவர் பிரபாவதியும், மாவட்டத் தலைவர் மாரிமுத்துவும் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலாக மாவட்டத் தலைவர் மாரிமுத்து, “இந்த பிரச்னைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார். இந்த சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?