இன்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்!
கோவை அருகே மாணவி மீது நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், “கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் சென்றபோது, 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப் பெண் ஆடையில்லாமல் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நாகரிக நகராக அறியப்படும் கோவையில் இப்படியான கொடூரம் நிகழ்ந்துள்ளது. பெற்றோர் இதனால் மனஅழுத்தத்தில் உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிலும் இதுவரை எந்த தீர்வும் இல்லை. மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. 2013-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள், இப்போது மௌனமாக உள்ளனர். முதல்-அமைச்சரும், கனிமொழியும் இதுவரை இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
கோவையில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதே இத்தகைய குற்றங்களுக்கு காரணம். இதனால் கோவை மாநிலத்தின் ‘போதையின் இரண்டாவது தலைநகரம்’ என மாறியுள்ளது. மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அதே நிகழ்வில் பா.ஜனதா மகளிர் அணி தேசியத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறுகையில், “கோவையில் நடந்த மாணவி வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தற்போது குற்றவாளிகளை கைது செய்யாமல், ‘என்கவுண்டர்’ வழியில் தீர்வு காணும் மனநிலையில் உள்ளது. இது சரியான நடைமுறை அல்ல. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியுள்ள இந்த அரசு தோல்வியடைந்தது” எனக் கூறினார். பா.ஜனதா சார்பில் இன்று தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!