மனைவி மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த ரேவதிக்கும் அவரது கணவர் சுரேஷ்குமாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ்குமார் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்று திடீர் ரகளையில் ஈடுபட்டார். அங்குத் தனது மனைவி, மாமியார் மற்றும் குழந்தையைப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார்.
ரேவதியும் அவரது தாயாரும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு பின்புற வாசல் வழியாகக் குழந்தையுடன் தப்பித்து உயிர்பிழைத்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தார். தீ மளமளவெனப் பரவி வாகனங்கள் எரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை உடனடியாகக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் உயிரோடு எரிக்க முயன்ற இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!