தலைமையாசிரியையிடம் செயின் பறிப்பு... பொறியியல் பட்டதாரி கைது!
சேலத்தில் தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு சம்பவத்தில், பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தான் பறித்த 8 பவுன் நகைகளை உருக்கிவிட்டதாக திவாகர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி சுகந்திபாய் (57) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுகந்திபாய் தனது குடும்பத்தினருடன் கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து ஈரோடு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்தார். அப்போது பொம்மிடி ரயில் நிலையத்தில் அவர் இறங்கி முதலாவது நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பிஓடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகந்திபாய் மற்றும் அவரது குடும்பத்தினர் இது தொடர்பாக சேலம் ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் தாத்தியம்பட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி திவாகர் (28) என்பதும், அவர், சம்பவத்தன்று பொம்மிடி ரெயில் நிலையத்தில் சுகந்தியிடம் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர் தான் திருடிய 8 பவுன் நகைகளை உருக்கிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் அந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
இதேபோல், மேலும், கடந்த ஜூலை மாதம் சேலத்தில் இருந்து விருதாச்சலம் சென்ற பயணிகள் ரெயிலில் ஏறி சிறுவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டபோது ஒரு பெண்ணிடம் 2 பவுன் நகைகளை திருடியதும், கடந்த மாதம் பொம்மிடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட 10 பவுன் நகைகள் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் மீட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!