முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை!
இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இன்று காலை 9.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு சென்று, அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
அதே நேரத்தில், சென்னை அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
முத்துராமலிங்கத் தேவர் 1908 அக்டோபர் 30 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து செயல்பட்ட அவர், ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, சாதி ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். 1963 அக்டோபர் 30 அன்று அவர் மறைந்தார்.
அவரின் நூற்றாண்டு விழா 2007-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பசும்பொனில் தேவர் இல்லம் புனரமைக்கப்பட்டு, நூற்றாண்டு தோரண வாயில், புகைப்படக் கண்காட்சி கூடம், அணையா விளக்கு, புதிய நூலகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், தேவர் பெயரில் நெல்லை, கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மதுரை மாநகரில் உயரமான முத்துராமலிங்கத் தேவர் சிலையும் அப்போது நிறுவப்பட்டது.
சமீபத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பசும்பொனில் அமைந்துள்ள *தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்* தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!