நவம்பர் 3 முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்... முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
தமிழ்நாடு அரசின் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவம்பர் 3 முதல் 6 வரை சென்னையில் சிறப்பு விநியோகம் நடைபெறும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும், உடல் மாற்றுத்திறனாளிகளும் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் நேரடியாக அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கப்படும்.
சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நவம்பர் மாதத்திற்கான வீடு தேடி விநியோகம் **அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம்** ஆகிய 15 மண்டலங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள் வீடு தேடி சென்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும், இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொதுமக்கள் அறியும்படி அறிவிப்பு பலகையில் தெளிவாக எழுத வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இந்த அத்தியாவசிய திட்டத்தை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!