பிறந்த நாளில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டத்தில் பிறந்தநாள் அன்று பிரைடு ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். ஜவுளி வியாபாரியான இவரது மனைவி பதுமேகலா. இந்த தம்பதியின் மகள் சஞ்சனா ஸ்ரீ (6) வீட்டின் அருகிலேயே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை இருந்து வருவதால் அவர், சென்னை வடபழனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தபடியே, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவியும் தங்கி இருந்து கவனித்து வந்தார். இதனால் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தாள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் என்பதால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சஞ்சனா ஸ்ரீ சென்னை வந்திருந்தார். பதுமேகலா, மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சஞ்சனா ஸ்ரீயைக் கடற்கரைக்கு அழைத்து சென்றார். அங்கு பொரித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு ஆசையாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தார்.
அடுத்த நாள் காலையில் மகளை எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தாள். அவளது வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடபழனி போலீசார் சிறுமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!