undefined

 அக்டோபர் 11ம் தேதி கிராம சபை கூட்டம்... ! 

 

 தமிழகத்தில் காந்தி ஜெயந்தி நாளான  அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.  நிர்வாகக் காரணங்களால்  அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை) அன்று ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சி, நிதிச் செலவினங்கள், பெயர் மாற்றங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும்படி  மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   


மக்களாட்சியின் அடித்தளமாகக் கருதப்படும் இந்தக் கிராம சபை கூட்டத்தில், கிராமப் பகுதிகளின் உடனடி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட உள்ளது.  சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுதல். இது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.  நிதி செலவினங்கள் குறித்துக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை  கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கையான படிவம் 30 மற்றும் இதர விவரங்களைச் சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை குறித்து விவாதித்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல். 
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முக்கிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தவும், அவற்றைச் சீரமைக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றுதல். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கும் திட்டங்கள் குறித்து விவாதித்தல். 


மத்திய, மாநில அரசுகளின் முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், சமூகப் பாதுகாப்பு குறித்தும் விரிவான விவாதம்   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II ஆகியவற்றின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல் என பல்வேறு விவாதங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.  மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என அனைவரும்  அக்டோபர் 11ம் தேதி தவறாது இந்தக் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?