இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே நாளில் உச்சம் தொட்ட பச்சைமிளகாய்... கிலோ ரூ.160க்கு எகிறியது!
தொடர் மழையால் ஒரே நாளில் பச்சை மிளகாய் விலை எகிறியது. ஒரு கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழையால் மைசூர் மிளகாய் வரத்து நின்று போனதால் இன்று ஒரே நாளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.160க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தக்காளி விலை மக்களை பயமுறுத்தி வந்த நிலையில், தற்போது தக்காளி விலை குறைந்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பச்சைமிளகாய் விலை பயமுறுத்துகிறது. கடந்த 6 மாதங்களாகவே தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்ந்து வரும் நிலையில், இஞ்சியைத் தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும் சதத்தைக் கடந்து கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை இந்த விலை கொடுத்து வாங்கி சமைப்பதை விட ஹோட்டலில் சாப்பிடுவதே மேல் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அசைவ உணவுகளை விட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலை நிலவி வருகிறது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனையாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டிற்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. வெளிமாநிலங்களில் வரத்து குறைந்தாலோ, தமிழகத்தில் மழை பாதிப்பால் விளைச்சல் பாதித்தாலோ காய்கறிகள் விலை அதிகரிக்கிறது.
இன்று மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பச்சை மிளகாய், கத்திரிக்காய் விலை அதிகரித்து விற்பனையாகிறது. மிளகாய் விலை உச்சபட்சமாக கிலோ ரூ.160 வரை இன்று காலை விற்பனையானது. வழக்கமாக மைசூருவில் இருந்து மட்டும் 5 டன் மிளகாய் வரைக்கும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வருகிறது. ஆனால், இன்று வெறும் 1 டன் மிளகாய் மட்டும் வந்தது. நேற்று கிலோ ரூ.60 வரை விற்பனையான பச்சை மிளகாய், இன்று ஒரே நாளில் கிலோ ரூ.160 வரை விற்பனையானது.
அதே போல் கடந்த சில நாட்ளாக கத்தரிக்காயும் விலை அதிகரித்து வந்தது. உள்ளூர் கத்திரிக்காய் வரத்து குறைவாலேயே விலை அதிகரித்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. உடுமலைப்பேட்டை, தேனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி ஒரளவு மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கியுள்ளது. அதனால், கிலோ ரூ.30 முதல் ரூ.50 விற்பனையான தக்காளியின் நேற்று விலை குறைந்து ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. காய்கறிகள் இந்த நிச்சமயற்ற விலை நிலவரத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா