உயரதிகாரிகள் டார்ச்சரால் வேறு வழியில்லை.. காவலர் மரணத்தில் திடீர் திருப்பம்.. காட்டிக் கொடுத்த ஆடியோ!

 

சென்னை ராயபுரம் காவல் குடியிருப்பில் காவலர் லோகேஷ்(38), தனது மனைவி ஷாலினியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு அபிஷேக், ஹாஷிகா என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் பிளாக் மார்க் செய்யப்பட்டு பெரவள்ளூர் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவு பிரச்சனை காரணமாக இருந்து வரும் நிலையில், பிளாக் மார்க் செய்யப்பட்டதால் லோகேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் லோகேஷிற்கு ரத்த கொதிப்பு பிரச்சனை இருப்பதால் உடனடியாக பணியிட மாறுதலை ரத்து செய்து வடக்கு மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என டிஜிபிக்கு லோகேஷின் மனைவி ஷாலினி மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற லோகேஷ் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அவரது மகள் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளார். அங்கு லோகேஷ்  உயிரிழந்து சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இறப்பதற்கு முன்னதாக காவலர் லோகேஷ் துணை ஆணையருக்கு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் பாலன் ஆகியோர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும், சமீபத்தில் 100 லிட்டர் டீசலை திருடி கொடுக்குமாறு ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒரு மாதத்திற்கு உதவி ஆணையர் ஐந்து லட்சம் ரூபாயும், காவல் ஆய்வாளர் ஒன்றை லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது மட்டும் இன்றி E-Challan மிஷினில் பல முறைகேடுகளிலும் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். உடனடியாக பணியிட மாறுதலாகி செல்லுமாறு தினமும் வீட்டிற்கு காவலர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதால், தான் குடும்பத்துடன் சென்று தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீருடன் ஆடியோவில் பேசியுள்ளார். 

இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர் லோகேஷ் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!