புரட்டி போட்ட மெலிசா புயல்... 174 ஆண்டுகளுக்குப் பின் ஜமைக்காவில் கடும் சேதம்!
கரீபியன் கடல் பிரதேச நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு, ஜமைக்கா ஆகியவற்றை இலக்காகக் கொண்டு வீசும் ‘மெலிசா’ புயல் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஹைதியில் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்; மற்றொருவர் மரம் விழுந்ததில் பலியானார். டோமினிகன் குடியரசிலும் ஒருவர் மரணமடைந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தேசிய புயல் மையத்தின் துணை இயக்குநர் ஜேமி ரோம் தெரிவிக்கையில், “மெலிசா புயல் மெதுவாக நகர்வதால் வடக்கு கரீபியன் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யும். வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. ஜமைக்கா மற்றும் ஹைதியின் தென்பகுதிகள், டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் நாள்பட்ட மழை எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
ஜமைக்கா அரசு, புயலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது. மரங்கள் வேருடன் சாய்தல், மின்கம்பங்கள் முறிதல், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்நிலையில், 174 ஆண்டுகளுக்குப் பின் ஜமைக்காவை மிக சக்திவாய்ந்த புயலாக மெலிசா தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று மாலை புயல் தெற்குப் பகுதியான செயின்ட் எலிசபெத் பாரிஷ் வழியாக கரையை கடந்து, வடக்கே செயின்ட் ஆன் பாரிஷ் பகுதி நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜமைக்கா அரசு அவசரநிலை எச்சரிக்கையை வெளியிட்டு, மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!