சாப்பிடக் கூட நேரம் இல்ல... 17 லட்சம் சம்பளம் வேண்டாம்... வேலையை விட்டு கதறும் ஐஐடி முன்னாள் மாணவர் !
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் கடும் பணி அழுத்தம் மற்றும் ஊழியர்களின் மனநலன் குறித்த விவாதங்கள், ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவரின் பதவி விலகலைத் தொடர்ந்து மீண்டும் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன. ஐஐடி டெல்லியில் பயின்ற 24 வயதான சிக்ராக் மதன் என்ற இளைஞர், ஆண்டுக்கு ரூ. 17 லட்சம் சம்பளம் கிடைத்தும் தனது வங்கிப் பணியைத் தூக்கியெறிந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ, இளைய தலைமுறையினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"பட்டதாரி இளைஞர்களின் கனவு வேலை இது; ஆனால் நிஜத்தில் இது ஒரு நரகமாக இருக்கிறது" என மதன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை என்று இருந்த வேலை நேரம், மெல்ல மெல்ல அதிகரித்து வாரத்திற்கு 6 நாட்கள் உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் துளியும் இடமில்லாமல் போனது தான் வேலையை விட முக்கிய காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலை நேரத்தில் மதிய உணவு உண்பதற்குக்கூட வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிதித் துறையில் குறிப்பாக 'ரிலேஷன்ஷிப் மேனேஜர்' போன்ற பதவிகளில் இருப்பவர்களுக்கு, இலக்குகளை எட்டக் கொடுக்கப்படும் கடும் நெருக்கடி பலரை மனரீதியாகப் பாதித்து வருகிறது. மதனின் இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான இளம் ஊழியர்கள், "நாங்களும் இதே சித்திரவதையைத்தான் அனுபவித்து வருகிறோம்" எனத் தங்கள் கசப்பான அனுபவங்களைக் கமெண்டுகளில் கொட்டி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!