குலசேகரப்பட்டினம் தசரா விழா தொடங்கியது... என்னென்ன கட்டுப்பாடுகள்? பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!
இன்று அதிகாலை குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக 200 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அக்டோபர் 2ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று செப்டம்பர் 23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், குங்குமம் உட்பட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கங்கள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் திருக்கோயில் பூசாரியிடம் திருக்காப்பு அணிந்து நேர்த்தி கடன்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க தொடங்கினார்கள்.
முதல் திருவிழா நாளான இன்று அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனம் – துர்க்கை திருக்கோலம், 24ம்தேதி கற்பக விருட்சம் வாகனம் – விசுவகர்மேசுவரர் திருக்கோலம், 25ம்தேதி ரிஷப வாகனம் – பார்வதி திருக்கோலம், 26ம் தேதி மயில் வாகனம் – பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 27ம் தேதி காமதேனு வாகனம் – நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், 28ம் தேதி சிம்ம வாகனம் – மகிஷாசூரமர்த்தினி திருக்கோலம், 29ம் தேதி பூஞ்சப்பரத்தில் – ஆனந்த நடராஜர் திருக்கோலம், 30ம் தேதி கமல வாகனம் – கஜலெட்சுமி திருக்கோலம், 1ம் தேதி அன்ன வாகனம் – கலைமகள் திருக்கோலம் என நாள்தோறும் இரவு 10 மணிக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.
6ம் திருவிழா முதல் 10ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் உட்பட கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 6மணி, காலை 7.30மணி, காலை 9மணி, காலை 10.30மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!